காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை காலையில் மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலி எண்ணிக்கை 72 ஆனது.
கடந்த ஜூலை 8-ம் தேதியன்று பாதுகாப்புப் படையினரால் புர்ஹான் வானி என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்தக் கலவரத்தில் இதுவரை போலீஸ்காரர்கள் உட்பட 72 பேர் பலியாகினர்; 11,000 பேர் காயமடைந்தனர்.
51 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு இன்று காலை முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சந்தைகளில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார். போக்குவரத்தும் ஓரளவு இருந்தது.
இத்தகைய சூழலில் பழைய ஸ்ரீநகரில் நோவட்டா பகுதியில் இன்று காலை இளைஞர்கள் சிலர் தெருவில் கூடி பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் மீண்டும் குவிக்கப்பட்டனர்.
இதேபோல் சோபூர் மாவட்டத்தின் டெங்போரா பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கல் வீசி மோதலில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவை தளர்த்தியவுடன் இளைஞர்கள் தெருவில் கூடி வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகளின் அட்டவணை:
பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவை விலக்கியிருந்தாலும், பிரிவினைவாதிகள் வியாழக்கிழமை வரை முழுஅடைப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கின்றனர்.
கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பிரிவினைவாதிகள் போராட்டம் தொடர்பான அட்டவணைகளை மக்கள் மத்தியில் விநியோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
54-வது நாளாக கல்வி நிறுவனங்கள் மூடல்:
காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்ட நிலையில் தனியார் வாகனங்கள் ஓரளவு இயக்கப்படுகின்றன. ஆனால், பொது போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை.
பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிலையங்கள் தொடர்ந்து 54-வது நாளாக மூடியிருக்கின்றன.