ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்து ‘ரீபண்ட்’ பெறுவதில் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை பெரும் சிரமத்தை கொடுக்கும் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் பயணம் செய்ய தற்போது 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில் பயணிகள் பட்டியல் (சார்ட்) தயாராவதற்கு முன்போ, தயாரித்த பிறகோ முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்து ரீபண்ட் பெறலாம். ரயில் புறப்பட்ட 2 மணி நேரம் வரையிலும் ரீபண்ட் பெற முடியும். அதையடுத்து டிக்கெட்டை ரத்து செய்து கவுன்ட்டரில் ரீபண்ட் பெறுவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும்.
ஒரு ரயிலில் ஒருவர் பயணம் செய்யவில்லை என்பதை டிக்கெட் பரிசோதகர் ரயில் போய்ச் சேரும் இடத்தில் கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். அந்தத் தகவல் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் ஆன பிறகு, அந்த டிக்கெட்டை கவுன்ட்டரில் கொடுத்து ரத்து செய்து பணத்தை ரீபண்ட் பெறலாம். இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு நீக்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக டிக்கெட் கட்டணத்தை ரீபண்ட் பெறுவதற்கு ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கலெக்டர் அல்லது புக்கிங் கிளார்க்கிடம் டிக்கெட் டெபாசிட் ரசீது (டி.டி.ஆர்.) பெற்று, தலைமை வர்த்தக மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
டி.பி.ஆரை பயண தேதியில் இருந்து ஒருவாரத்துக்குள் வாங்கியாக வேண்டும். அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குள் ‘கிளைம்’ கோரி விண்ணப்பிக்க வேண்டும். அன்றைய தேதியில் இருந்து 3 மாதத்திற்குள் ‘ரீபண்ட்’ கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து சாத்தூர் தொழில் வர்த்தக சபை பொதுச்செயலாளரும், கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான பி.டி.கே.ஏ. பாலசுப்பிரமணியன் கூறுகையில், “ரயில் டிக்கெட் ‘ரீபண்ட்’ பெறுவதில் புதிய நடைமுறையைக் கொண்டு வருவதால் ரயில்வே துறைக்கு சிரமத்தையும், செலவினத்தையும் குறைக்கலாம்.
ஆனால், பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். முன்பதிவு டிக்கெட்டை கவுன்ட்டரிலே கொடுத்து ‘ரீபண்ட்’ பெறுவதற்குப் பதிலாக, அதற்காக பல மாதம் காத்திருக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே ‘ரீபண்ட்’ கோரி பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் போது, புதிய நடைமுறையால் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்குமே தவிர பயணிகளுக்கு எவ்விதத்திலும் பயன்படாது” என்றார். ரயில் பயணிகள் பலரும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.