உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதன்படி, முதல்கட்டமாக மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ல் தேர்தல் நடைபெறகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
முஸாபர்நகர், மீரட், காஸியாபாத், கவுதம புத்தர் நகர், மதுரா, ஆக்ரா உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 15 மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 24-ம் தேதி முடிகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 27-ம் தேதி கடைசி நாளாகும்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறையும் வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதேநேரம், தலித்-முஸ்லிம் வாக்குகளை அதிக அளவில் நம்பி உள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இது வாழ்வா சாவா போராட்டமாக அமையும். இக்கட்சி அதிகபட்சமாக முஸ்லிம்களுக்கு 97 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.