2013- ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான சர்வதேச அளவிலான நடுவர்கள் கொண்ட குழு, மெர்கலை இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு தேர்வசெய்துள்ளது. இத்தகவலை இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச நிதி நெருக்கடியின் போது, ஐரோப்பிய பிராந்தியத்தில் அவரது தலைமை சிறப்பாக இருந்தமைக்காகவும், ஜெர்மன் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவர் ஏற்று நடத்திய சிறப்பான தலைமைக்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச அமைதியை நிலை நாட்டுவதில் அவரது பங்களிப்பிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளுடன் ஸ்திரமான நட்புறவை மேம்படுத்தியதற்காகவும் மெர்கலுக்கு, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை பாராட்டு தெரிவிதுள்ளது.
ஜெர்மன் நாட்டின், முதல் பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் என்பது குறிப்பிடத்தக்கது.