“ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியே தீரவேண்டும். இது எங்களின் உரிமை” என்று ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் முழங்கினார்.
ஜனசேனா கட்சி சார்பில் திருப்பதி யில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது தொடர் பாக அவர் பேசியதாவது:
திருப்பதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக பிரதமர் மோடி பேசினார். ஆனால் இதுவரை அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியே தீர வேண்டும். இது எங்களின் உரிமை. இதற்காக வரும் செப்டம்பர் முதல் படிப்படியாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். சிறப்பு அந்தஸ்துக்காக 3 கட்டமாக போராட ஜன சேனா கட்சி முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அந்தஸ்து குறித்து விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் படும். இது வரும் செப்டம்பர் 9-ம் தேதி காக்கிநாடாவில் தொடங்கும். 2-ம் கட்டமாக அனைத்து கட்சி எம்.பி.க்களையும் போராட வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இறுதிக்கட்டமாக இது மக்கள் போராட்டமாக வெடிக்கும்.
இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.