தமிழகம், கேரளம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என ரகுராம் ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் (இப்போது ரிசர்வ் வங்கி கவர்னர்) தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.
பின்தங்கிய மாநிலங்களை மேம்படுத்துவதற்காக அவற்றுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கும் நோக்குடன் சிறப்பு அந்தஸ்து தகுதி வழங்கப்பட்டு வருகிறது.
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தகுதி வழங்க வேண்டுமென்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க ரகுராம் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பத்திடம் அளித்துள்ளது. அதில், மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தகுதி வழங்குவதை நிறுத்திவிட்டு, பல நோக்கு குறியீடு (எம்.டி.ஐ) என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் மேம்பாட்டுக்கான நிதியை வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
கோவா, கேரளம் ஆகிய மாநிலங்கள் மிகவும் முன்னேறிய மாநிலங்கள் என்றும் ஒடிசா மற்றும் பிகார் பின்தங்கியுள்ள மாநிலங்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கிய 10 மாநிலங்களில் ஓடிசா, பிகாருக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பட்டியலில் கோவா, கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரம், உத்தராகண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் உள்ளன.