இந்தியா

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ், கடந்த ஜூலை 19-ம் தேதி சேலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆடிட்டர் ரமேஷின் நண்பரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான நங்கவள்ளி தி.மனோகரன் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னி லையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறுகை யில், ‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உண்மைக் குற்றவாளிகள் அல்ல. கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட வில்லை. எதற்காக, யாருடைய உத்தரவில் கொலை செய்தார்கள் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அறிய அவர்களிடம் உண்மை அறியும் சோதனையும் நடத்தப்படவில்லை” என்றார்.

பின்னர், நீதிபதிகள் கூறியதாவது: வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சிபிசிஐடியின் புலன் விசாரணை முடிவடையாத நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது.

எனினும், வழக்கு விசாரணையில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாவிட்டால், மனுதாரர் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT