மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஓக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா போட்டியிடுகிறார்.
மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் மாநில முதல்வர் இபோபி சிங் போட்டியிடும் தவுபால் தொகுதியில் அவரை எதிர்த்து சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா போட்டியிடுகிறார்.
இந்தத் தகவலை இரோம் சர்மிளாவின் மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் எரெண்டிரோ லெய்சான்பம் உறுதி செய்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்கக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சர்மிளாவுக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை. எனவே, அந்த சட்டத்தை நீக்கும் எண்ணத்தில் அவர் அரசியலில் குதித்திருப்பதாக கூறப்படுகிறது.
மணிப்பூரை பொறுத்தவரை, இபோபி சிங் தலைமையில் 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியள்ளது. அதிலும் சர்மிளா போட்டியிட முடிவு செய்துள்ள தவுபால் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்குக்கே அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரோம் சர்மிளாவை ஆதரித்து அவரது கட்சித் தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர குராய் தொகுதியிலும் சர்மிளா போட்டியிடுகிறார்.
தேர்தல் சின்னமாக விசிலை ஒதுக்கும்படி சமீபத்தில் இரோம் சர்மிளா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த சின்னம் ஒதுக்கப்பட்டதும் 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த இரோம் சர்மிளா கட்சி முடிவு செய்துள்ளது.
அதே சமயம் ஆளும் காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதே போல் நாகா மக்கள் முன்னணி சார்பில் 15 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.