மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலையை எதிர்த்து 32 ஆண்டுகளாக போராடி வருவதால் பெஸ்வாடா வில்சன் (50) மகசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தொண்டை அங்கீகரித்து விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது போராட்டப் பயணம் இன்னும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.
இது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மனித கழிவுகளை அள்ளும் தொழிலை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே மீட்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பெஸ்வாடா?
கர்நாடகா மாநில கோலார் பெஸ்வாடா வில்சன் பிறந்த ஊர். 1986-87 காலகட்டத்தில் தான் பெஸ்வாடாவின் முதல் எதிர்ப்புக் குரல் பதிவானது. கோலார் தங்க வயலில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் இருந்து மனிதக் கழிவுகளை அகற்றுமாறு தலித் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வில்சன் தனது முதல் குரலை பதிவு செய்தார். அவரது சொந்த குடும்பத்தினரே தலைமுறை தலைமுறையாக மனித கழிவுகளை அள்ளும் தொழிலை செய்து வந்துள்ளனர். அவர் அன்று எழுப்பிய எதிர்ப்புக் குரல் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் 3 லட்சம் பேரை இத்தொழிலிலிருந்து வில்சன் மீட்டுள்ளார்.
காத்திருக்கும் சவால்:
32 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனாலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறையை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதில் சவால்கள் ஓயவில்லை. இந்தத் தொழிலை செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை எந்த ஒரு மாநில அரசும் முழுமையாக செய்யவில்லை. 2010-ம் ஆண்டு முதல் கணக்கெடுப்பு செய்வதாகவே அத்தனை மாநில அரசுகளும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தூய்மை இந்தியா திட்டத்தில் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர் நலன் குறித்து எதுவும் இல்லை மாறாக கூடுதலாக கழிவறைகளைக் கட்டுவது தொடர்பான உறுதிமொழிகள் மட்டுமே இருக்கின்றன.
2014-ல் மத்திய அரசிடம் ஒரு பட்டியல் அளித்தோம். அதில், கழிவுத் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும்போது பலியான 1073 பேர் விவரங்களையும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இன்றுவரை எல்லா குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. 36 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் நீதிமன்றம் நிர்ணயித்த முழுத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில், "மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தொழிலை அனைத்து மாநிலங்களும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், பணியின்போது உயிரிழக்கும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கோலாரில் நீடிக்கும் அவலம்..
பெஸ்வாடாவின் சொந்த ஊரான கோலார் தங்க வயலில் இன்னமும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் இழிநிலை நீடிக்கிறது. 2001-ம் ஆண்டிலேயே கோலார் தங்க சுரங்கத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், அங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலோனோ இன்னமும் பழைய முறை கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் 82 பேர் மட்டுமே இத்தொழில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தாலும் 800 குடும்பங்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.