இந்தியா

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்த் உட்பட 7 பேர் விடுவிப்பு

மொகமது இக்பால்

2007-ம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது ஜெய்பூர் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் மொத்தம் 13 பேர் குற்றம்சாட்டப்பட்டதில் 7 பேர் விடுவிக்கப்பட்டு, 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது, மூன்று பேர் தலைமறைவாக உள்ளனார்.

குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் பவேஷ் படேல், தேவேந்திர குமார் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் அடங்குவர். இவர்களில் ஜோஷி 2007 டிசம்பரில் படுகொலை செய்யப்பட்டார். புவனேஷ், தேவேந்திரா ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வுக் கழக நீதிமன்ற நீதிபதி தினேஷ் குப்தா, மேலும் வாதங்கள் மற்றும் தண்டனை குறித்த தீர்ப்புக்காக வழக்கு விசாரணையை மார்ச் 16-ம் தேதி ஒத்தி வைத்தார்.

அக்டோபர் 11,2007-ல் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி 17 பேர் காயமடைந்தனர். இஃப்தார் தின வழிபாட்டிற்காக அப்போது சுமார் 5,000 பக்தர்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் போது 2010-ம் ஆண்டு சுவாமி அசீமானந்தா, முஸ்லிம்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக தானும் பிறரும் சிலபல வழிபாட்டு இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யப்போவதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் அரசு தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வாதங்கள், சாட்சியங்கள் ஏகப்பட்டது இருப்பதால் நீதிபதிகள் இருமுறை தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் 2011-ல் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு குழுவிடமிருந்து தேசிய புலனாய்வுக் கழகத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 2014-ல் மத்தியில் ஆட்சி மாறியவுடன் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் லோகேஷ், சந்திரசேகர் ஆகியோர் உட்பட சுவாமி அசீமானந்த், பவேஷ் படேல், ஹர்ஷத் சோலங்கி, தேவேந்திர குமார், மேகுல் குமார், முகேஷ் வசானி, பாரத் பாய் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT