தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, தங்கள் கோரிக்கை தொடர்பாக மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவானை இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.
சுங்கவரி வசூலுக்கு எதிராக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்துக்கு ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இப்போராட்டத்தை ஒட்டி புதன்கிழமை காலை தாதரில் உள்ள தனது இல்லத்திலிருந்து நவி மும்பையில் வாஷி என்ற இடத்திலுள்ள சுங்க வரி வசூல் சாவடி நோக்கி தனது ஆதரவாளர் களுடன் ராஜ் தாக்கரே காரில் சென்றார்.
இந்நிலையில் செம்பூர் என்ற இடத்தில் போலீஸார் அவரை கைது செய்து அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 2 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியேறும் முன், ராஜ் தாக்கரே நிருபர் களிடம் கூறுகையில், “வன் முறையை கைவிட்டு அமைதி காக்கும் படி தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பது நமது நோக்கமல்ல. நமது கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கச் செய்வதே நோக்கம்.
நான் காவல் நிலையத்தில் இருந்தபோது, முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொலை
பேசியில் தொடர்புகொண்டு நாளை பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைத்துள்ளார். நான் முதல்வரிடம் நமது கோரிக்கை களை முன்வைப்பேன்” என்றார்.
ராஜ் தாக்கரேவின் மறியல் போராட்டத்தால் பரவலாக வன்முறைகள் நிகழும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இப் போராட்டம் அமைதியாக முடிந்தது மக்களுக்கும், போலீஸாருக்கும் நிம்மதியை அளித்தது.