கொல்கத்தாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர், ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தரை இறங்குவதற்கு கடைசி நேரத்தில் ராணுவம் அனுமதி மறுத்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு மத்திய அரசின் சதியே காரணம் என மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா செவ்வாய்க்கிழமை குறை கூறினார்.
பிரிகேட் பரேட் மைதானத்தில் புதன்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் உரையாற்றுவதற்காக மோடி வரவுள்ள ஹெலிகாப்டர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தரை இறங்க குஜராத் அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் செவ்வாய்க்கிழமை ராணுவம் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக ராகுல் சின்ஹா நிருபர்களிடம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோதான் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை பயன் படுத்த முடியும், அரசியல்வாதி எவரும் அதை பயன்படுத்த முடியாது என ராணுவம் கைவிரித்து விட்டதாக சின்ஹா தெரிவித்தார்.
இந்த முடிவை 2 அல்லது 3 தினங்களுக்கு முன் தெரி வித்திருந்தால் வேறு ஏற்பாடுகளை செய்திருப்போம்.
மத்திய அரசு கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காகவே என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹெலி காப்டரில் நரேந்திர மோடியை அழைத்துவர திட்டமிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசின் சதியே காரணம் என்றார் ராகுல் சின்ஹா.