இந்தியா

பழைய ரூபாய் நோட்டை மாற்ற உதவுங்கள்: ஆதரவற்ற அண்ணன், தங்கை பிரதமர் மோடிக்கு கடிதம்

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் சராவதா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா பன்ஜாரா. கணவரை இழந்த அவர் மகன் சூரஜ், மகள் சலோனியுடன் வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் பூஜா கொலை செய்யப்பட்டார்.

ஆதரவற்ற நிலையில் சூரஜும் சலோனியும் ரங்பாரி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப் போது சொந்த கிராமத்தில் வீடு இருப் பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாநில சமூக நலத் துறை அதிகாரிகள், போலீஸார் இணைந்து அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் 96,500 ரூபாய் பழைய நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை மாற்ற சமூக நலத்துறை அதிகாரிகள் முயன்றபோது ரிசர்வ் வங்கி கைவிரித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து சூரஜும் (16), சலோனியும் (11) பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். ‘எங்களது தாயார் கூலி வேலை செய்து ரூ.96,500-ஐ சேர்த்துள்ளார். இந்த ரூபாயை மாற்றி சலோனியின் பெயரில் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பதிலை அண்ணனும் தங்கையும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT