இந்தியா

ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகாரில் முகாந்திரம் உள்ளது: நீதிபதிகள் குழு அறிக்கை

செய்திப்பிரிவு

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பெண் பயிற்சி வழக்குரைஞரின் பாலியல் புகாரில் போதிய முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் பயிற்சி வழக்கறிஞர், 3 சாட்சிகள், முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி ஆகியோரிடம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட நாளில் அந்த பெண், நீதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றது உண்மை. இதை ஏ.கே. கங்குலியும் மறுக்கவில்லை. பெண் வழக்கறிஞர், சாட்சிகள், கே. கங்குலியின் ஆகியோரின் வாக்குமூலங்களை ஆராய்ந்ததில் அந்தப் பெண்ணிடம் ஏ.கே. கங்குலி பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டற்கான முகாந்திரம் உள்ளது தெரியவருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2 பக்க அறிக்கையை வெளியிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் கூறும்போது, "சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயர், உச்ச நீதிமன்றத்தின் பயிற்சி வழக்கறிஞராக பட்டியலில் இடம்பெறவில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது ஏ.கே.கங்குலி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் உச்ச நீதிமன்றம் எடுக்கத் தேவையில்லை" என்றார்.

கங்குலி கருத்து தெரிவிக்க மறுப்பு:

இந்த நிலையில், 3 நீதிபதிகள் அளித்த அறிக்கை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து கூற மறுத்துவிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன கூறியுள்ளனர் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்றார் அவர்.

முன்னதாக, 2012-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஹோட்டல் ஒன்றில் சட்டப் பணிகளில் உதவுவதற்காக தன்னை அழைத்த நீதிபதி ஏ.கே. கங்குலி, தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார் என்று பயிற்சி பெண் வழக்கறிஞர் புகார் கூறினார்.

இந்தப் பாலியல் புகாரைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக உள்ள ஏ.கே. கங்குலி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT