கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்.எஸ்.பி. (புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி) எஸ்.ஜே.டி. (சோஷலிஸ்ட் ஜனதா (ஜனநாயக) கட்சி) ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளத்தில் மூடப்பட்ட 418 மதுக் கூடங்களை மீண்டும் திறப்பதற்கு மாநில நிதியமைச்சர் கே.எம்.மணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ராஜேஷ் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அச்சுதானந்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுப்புது ஊழல்புகார்கள் வெளியாகி உம்மன் சாண்டி அரசு தினமும் பிரச்சினையில் சிக்குகிறது. கே.எம். மணி மட்டுமே இந்த பணத்தை பெற்றிருக்க முடியாது. மற்ற அமைச்சர்களுக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த வெட்கமற்ற அரசில் இடம்பெற வேண்டுமா என்பதை ஆர்.எஸ்.பி., எஸ்.ஜே.டி. ஆகிய கட்சிகள் யோசிக்க வேண்டும். மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இவ்விரு கட்சிகளின் கருத்தை கேரள மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.
ஆர்.எஸ்.பி., எஸ்.ஜே.டி. ஆகிய கட்சிகள் இதற்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியில் இருந்தன. எஸ்.ஜே.டி. 2009 மக்களவை தேர்தலின்போதும், ஆர்.எஸ்.பி. 2014 மக்களவை தேர்தலின்போதும் இடதுசாரி அணியை விட்டு விலகின.
ஆர்.எஸ்.பி.க்கு தற்போது 3 எம்எல்ஏக்களும், எஸ்ஜேடிக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அச்சுதானந்தன் கூறுவதை ஏற்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால், 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் பலம் சரிசமம் (70 ஆக) ஆகிவிடும். கே.எம்.மணிக்கு எதிரான லஞ்சப் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.