அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்கரடே ஐ.நா.வுக்கான ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்க போலீஸார் கைது செய்தது தவறு என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. நியூயார்க் துணைத் தூதராக செயல்பட்ட தேவயானி, ஐ.நா. பொது அவை கூட்டத்தையொட்டி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப் பட்டிருந்தார். அவரது ஐ.நா. தூதரகப் பணிக்கான அங்கீகாரம் 2013 ஆகஸ்ட் 26 முதல் 2013 டிசம்பர் 31-ம் தேதி வரை உள்ளது. ஐ.நா. தூதருக்கு உரிய சட்ட உரிமைகளின்படி அவரைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ, உடைமைகளை பறிமுதல் செய்யவோ கூடாது. இந்த விதிகளை அமெரிக்கா மீறியுள்ளது என்று இந்திய வெளியறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல் தேவயானி வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.