பாஜக.வில் புதிதாக சேர்ந்த வருக்கு அயோத்தியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதை கண்டித்து உள்ளூர் கட்சித் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகளைப் பல மணி நேரம் சிறை பிடித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. மிக முக்கியமான அயோத்தி தொகுதி வேட்பாளராக வேத குப்தா என்பதை பாஜக மேலிடம் அறிவித்தது. இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில்தான் பாஜக.வில் சேர்ந்தார். அவருக்கு சீட் வழங்கியதை கண்டித்து உள்ளூர் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பைசாபாத் பாஜக மாவட்ட அலுவலகத்தை நேற்று பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்த உள்ளூர் எம்.பி. லல்லு சிங், மாவட்ட பாஜக தலைவர் அவதேஷ் பாண்டே, கட்சி நிர்வாகிகளை கட்டி வைத்து கோஷமிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தொண்டர்களின் கோரிக்கை குறித்து மாநில பாஜக தலைவர்களிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று லல்லு சிங்கும் அவதேஷ் பாண்டேவும் உறுதி அளித்தனர். அதன்பின் 2 பேரையும் 2 மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்தனர்.
இதுகுறித்து பாண்டே கூறும் போது, ‘‘அயோத்தி வேட்பாளராக பாஜக.வுக்கு பல ஆண்டுகள் உழைத்தவரை அறிவிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். வேத குப்தாவை அவர்கள் வெளியாளாகவே நினைக்கின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்த கட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு எங்களைச் சிறை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியினரின் கோரிக்கையை மேலிடத்தில் சொல்லி நல்ல தீர்வு காண முயற்சிப்போம்’’ என்றார்.
காங்கிரஸில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் வேத குப்தா. 1980-ல் பாஜக.வில் சேர்ந்தார். 1992-ல் பாபர் மசூதி இடிப்பின் போது தீவிரமாக செயல்பட்டவர். பின்னர் 2002-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அயோத்தி தொகுதியில் போட்டியிட்டார்.
அதன்பின் 2012-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அயோத்தியில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு பாஜக.வில் சேர்ந்து அயோத்தி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி உள்ளார். அதனால் உள்ளூர் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.