இந்தியா

பலாத்காரம், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உ.பி. முதல்வர் நேரில் ஆறுதல்

செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் பலாத்காரம், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் பார்த்தார்.

உத்தரபிரதேசம் ரேபரேலி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் கடந்த 2008-ம் ஆண்டில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் அமிலம் வீசப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி லக்னோவில் பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக இழுத்தடிக் கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு இவ்வழக்கு விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்தது.

இந்நிலையில் சொந்த ஊரில் இருந்து லக்னோவுக்கு ரயிலில் சென்ற அந்த பெண்ணை ஒரு கும்பல் வழிமறித்து அவரது வாயில் அமிலம் ஊற்றியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.யு. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார்.

பலாத்காரம் மற்றும் 2 முறை அமில வீச்சால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ மனையில் நேற்று நேரில் பார்வை யிட்டு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்தார். இதைத் தொடர்ந்து அமிலம் வீசிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நிருபர்களிடம் கூறிய போது. ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். எனது மனைவிக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT