ஹரியாணாவில் பாஜக சதி செய்ததாக புகார்
மாநிலங்களவையில் ஹரி யாணா மாநிலத்தில் இருந்து காலியாகும் 2 இடங்களுக்கு கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஓரிடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் வீரேந்திர சிங் வெற்றி பெறுவது உறுதியானது.
மற்றொரு இடத்துக்கு பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக டிவி சேனல் அதிபர் சுபாஸ் சந்திராவும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்தும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பேனாவை (ஊதா நிற மை கொண்ட பேனா) பயன்படுத்தவில்லை என்று கூறி 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது தவிர பிற விதிகளை காரணம் காட்டி மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஐஎன்எல்டி காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் ஆர்.கே.ஆனந்த் வெற்றி வாய்ப்பை இழந்தார். மாறாக பாஜக ஆதரவு பெற்ற சுபாஸ் சந்திரா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஆர்.கே. ஆனந்த், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத், கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் தன்வார் உள்ளிட்டோர் ஹரியாணாவில் நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் ஆணை யத்திடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறும் போது, “ஹரியாணாவில் மாநிலங் களவை தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் வகையில் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைமை யில் சதி நடந்துள்ளது. பாஜக ஆதரவுடன் வென்ற சுபாஸ் சந்திரா, சுயேச்சை எம்எல்ஏ ஜெய் பிரகாஷ் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
சுயேச்சை எம்எல்ஏ ஜெய் பிரகாஷ், வாக்குப் பதிவு அறை யில் இருந்து அதிகாரப்பூர்வ பேனாவை எடுத்து வந்து விட்டார். அதற்கு பிறகு சென்ற பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் பேனாவை மாற்றி விட்டார். சிறிது நேரம் கழித்து ஜெய் பிரகாஷ் மீண்டும் வாக்குப் பதிவு அறைக்குச் சென்று அதிகாரப் பூர்வ பேனாவை வைத்துவிட்டார்.
இந்த சதியால் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாமல் போனதாக அறிவிக் கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் சிலரும் இதற்கு துணை போயுள் ளனர். எனவே ஹரியாணாவில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவிக்குமாறு வலியுறுத்தி னோம்” என்றனர்.