இந்தியா

மோடி அரசுக்கு எதிராக டிச.8 முதல் 14 வரை போராட்டம்: இடதுசாரி கட்சிகள் முடிவு

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து டிசம்பர் 8 முதல் 14-ம் தேதி வரை போராட்டம் நடத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

டெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி சோசலிச கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.யூ.சி.ஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய 6 இடதுசாரி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக் கப்பட்டு பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது தாராளமய கொள்கைகளைத் திணிப்பதன் மூலமாக மக்கள் மீது மோடி அரசு தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றில் எதுவும் குறையவில்லை.

கல்வி, சமூக மற்றும் கலாசார அமைப்புகளை மதமயமாக்கும் நோக்கத்துடன் மோடி அரசு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. இதை கண்டிக்கிறோம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்கக் கூடாது. அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கக் கூடாது. கருப்பு பணத்தை மீட்க வேண்டும். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் டிசம்பர் 8 முதல் 14-ம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட் கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT