உத்தரப் பிரதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய, சுரங்கத் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
சட்டவிரோதமாக சுரங்கம் இயங்க அனுமதித்த விஷயத்தில், அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த கடந்த ஜூலை 28-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாநிலம் முழுவதும் சுரங்கத் துறையில் நடந்த முறைகேடுகளை விசாரித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சமாஜ்வாடி அரசு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அந்த மனுவை கடந்த 9-ம் தேதி தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது. இதையடுத்து சுரங்கத் துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை நேற்று பதவியில் இருந்து நீக்கினார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
தவிர பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜ் கிஷோர் சிங் மீது நில ஆக்கிரமிப்பு மற்றும் ஊழல் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரையும் முதல்வர் அகிலேஷ் பதவியில் இருந்து நேற்று நீக்கினார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘அமைச்சர்கள் 2 பேரை பதவி நீக்கம் செய்தது தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது’’ என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், சமாஜ்வாதி தேசிய தலைவர் முலாயம் சிங் கூறும்போது, ‘‘அடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், ஊழலைத் தவிர்க்க வேண்டும்’’ என்று கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ‘‘அமைச்சரைப் பதவி யில் இருந்து நீக்கியது வெறும் கண்துடைப்பு. சுரங்கத் துறையில் நடந்த ஊழல்களை மறைக்கவே நாடகம் ஆடுகின்றனர்’’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.