ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு, தனது அறிக்கையை விரைவில் மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்யும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று டெல்லியில், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட ஆந்திரம், சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதி தலைவர்கள், தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவினரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, மாநிலத்தை பிரிக்கும் போது ஏறப்டும் எல்லை வரையறை, அதிகாரப் பகிர்வு, நிரவாகப் பகிர்வு, வாக்காளர் தொகுதிகள் பிரிப்பது ஆகியன குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே: தெலங்கானா தொட்ரபான ஆலோசனை, கருத்துக் கேட்பு முடிந்து விட்டது. இனி மீண்டும் ஒரு முறை தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு கூடி இறுதி அறிக்கையை உறுதி செய்யும்.நவம்பர் 21- ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும்.
இம்மாத இறுதியில், அறிக்கை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும். வரும், குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக சட்ட மசோதா சீர்திருத்தத்தைக் கொண்டு வரும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.