ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கோபம் உள்ளிட்ட மிகை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அழுத்தம் தரும் சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாளவும் இந்த யோகாப் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோகாப் பயிற்சியை ஜவான்களுக்காக சொல்லிக் கொடுத்தவர் ஆயுர்வேத மருத்துஅரும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் தனிப்பட்ட யோகா ஆசிரியருமான டாக்டர் அமிர்த ராஜ் ஆவார்.
இந்த யோகாப் பயிற்சி குறித்து ஜம்மு காஷ்மீர் சிறப்பு டிஜி எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “மிகை உணர்ச்சிகளையும், மன அழுத்தங்களையும் கட்டுப்படுத்த யோகா சிறந்ததாகும். குறிப்பாக இவர்கள் கல்லெறி தாக்குதலை எதிர்கொள்கின்றனர், இப்போதைய பயிற்சியினால் கல்லெறி சம்பவங்களை இவர்கள் நிதானமாக எதிர்கொள்ள முடியும்” என்றார்.
ஜவான்களும் யோகா பயிற்சிக்குப் பிறகு மனம் நிம்மதியாக இருப்பதாகவும் மனச்சுமை, சோர்வு குறைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.