இந்தியா

பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது ஆம் ஆத்மி: காங்கிரஸ்

செய்திப்பிரிவு

பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டெல்லியில் ஆட்சி அமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சி அமைக்கப்போவதில்லை என தெரிவித்து விட்ட நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க துணை நிலை ஆளுநரிடம் 10 நாள் அவகாசம் கோரியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லியில் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் அறிவித்தும் அதனை ஏற்க மறுத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்காமல் பொறுப்புகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தப்பிக்க முயல்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பக்த சரண் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது அரசியலமைப்பு கடமையாக கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆம் ஆத்மி ஏற்க வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவையே காங்கிரஸ் வழங்குகிறது. அதனால் கெஜ்ரிவால் நிபந்தனைகள் விதிக்க தேவையில்லை என்றார்.

SCROLL FOR NEXT