இந்தியா

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 4 துணை மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளது.

நாடு முழுவதும் இப்போது நடைமுறையில் உள்ள பல்முனை வரி விதிப்புக்கு பதில் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு ஏதுவாக, நீண்டகால இழுபறிக்குப் பிறகு அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யூடிஜிஎஸ்டி) ஆகிய 4 துணை மசோதாக்கள் கடந்த மார்ச் 29-ம் தேதி மக்களவையிலும் ஏப்ரல் 6-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறின.

இதையடுத்து, இந்த மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு பிரணாப் ஒப்புதல் வழங்கி உள்ளார். எனினும், மாநில ஜிஎஸ்டி மசோதாவை அனைத்து மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு ஜிஎஸ்டி மசோதாக்கள் சட்டமாகிவிடும். இதையடுத்து, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த பொருள் அல்லது சேவைக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் வரும் மே 18, 19 தேதிகளில் கூடி ஆலோசனை நடத்தும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றியும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளதால் ஜிஎஸ்டி சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது. எனவே, அந்த மாநிலத்தில் இது தொடர்பாக தனியாக ஒரு சட்டம் இயற்ற வேண்டியிருக்கும் என்று அருண் ஜேட்லி ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஜிஎஸ்டி என்பது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கை ஆகும். இதன் மூலம் மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி மற்றும் இதர உள்ளூர் வரி ஆகியவை கைவிடப்படும். இனி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விகிதம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

SCROLL FOR NEXT