இந்தியா

அறிவியல்பூர்வ ஆய்வுக்கு பின்னரே பழைய டீசல் கார்கள் குறித்து முடிவு: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

பிடிஐ

‘வாகன புகை சோதனை உள்ளிட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, பழைய டீசல் கார்களை ஒழித்துக்கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 ஆண்டு பழமையான டீசல் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் என்பதால், அவற்றை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் 15 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும். டீசல் வாகனங்கள் பதிவு செய்வதையும் தடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு அதரவும், எதிர்ப்பும் ஏற்பட்ட நிலையில், இவ்விவ காரத்தில் மத்திய அரசின் நிலைப் பாடு என்ன என்பது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் மன்சுக் லால் மாண்டவியா இதற்கு பதில் அளிக்கும்போது கூறியதாவது: 15 ஆண்டு பழமையான டீசல் கார்களால் வெளிப்படும் வாகன புகை மாசு குறித்து, கனரக தொழிற்சாலைகள் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, எந்தவொரு முடிவையும் நாம் எடுக்கமுடியும். 2000 சிசி திறன் கொண்ட, 15 ஆண்டு பழமையான கார்களின் பதிவை ரத்து செய்ய உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே அறிவுறுத்தியது.

எனினும் பின்னர் இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் நிவாரண வரி செலுத்திவிட்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு முடிவெடுக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT