டெல்லி சட்டசபையை இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கூட்ட முடிவெடுத்தது ஏன் என விளக்கம் கேட்டு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வரும் 16-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சட்டசபையைக் கூட்டி, பொதுமக்கள் முன்னிலை யில் ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடமும் அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக சட்டசபையை வெளியில் கூட்ட தடை விதிக்கக் கோரி, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கேதர் குமார் மண்டல் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் சித்தார்த் மிருதுள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விஷயத்தில் துணைநிலை ஆளுநர் இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு நீதிபதிகள் கூறுகையில், “சட்டசபையைக் கூட்டுவதற்கென உள்ள இடத்தை விட்டு, வேறு இடத்தில் கூட்டுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என வியாழக்கிழமை பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, நீதிபதிகள் மேலும் கூறுகையில், “ஒருவேளை டெல்லி அரசின் எண்ணம் நிறைவு பெறவில்லை என்பதில் திருப்தி அடைந்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.
அதற்கு முன் நீங்கள் சில சட்ட விளக்கங்களை அளிக்க வேண்டியது அவசியம்" என டெல்லி அரசிடம் தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
சட்டசபையை இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கூட்டினால் பாதுகாப்பு தருவது கடினம் என டெல்லி போலீஸார் ஏற்கெனவே கருத்து கூறியிருந்தனர். இதற்கு, பாதுகாப்பு தர முடியாவிட்டால் போலீஸார் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கேஜ்ரிவால் சாடி இருந்தார்.
சட்டசபையை வெளியில் கூட்டுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநரும் ஏற்கெனவே கூறியிருந்தார்.