உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பதன் மூலம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக.வின் பலம் அதிகரித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், 29 மாநில எம்எல்ஏ.க்கள், தலைநகர் டெல்லி மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந் தெடுக்க உள்ளனர்.
இந்நிலையில், மக்களவையில் மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில், பாஜக.வுக்கு 281 எம்.பி.க்களின் பலம் உள்ளது. ஆனால், பாஜக விரும்பும் ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க கூடுதல் பலம் தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இத னால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக.வின் பலம் அதிகரித்துள்ளது.
பாஜக.வைப் பொறுத்த வரை மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார் கண்ட், மத்தியப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே ஆட்சியில் உள்ளது. தவிர ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (பிடிபி), ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும் பாஜக கூட்டணி வைத்துள்ளது. தற்போது நாட்டிலேயே மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேச மாநிலம் மற்றும் உத்தராகண்ட் மாநிலத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் விரும்பும் ஒருவரை வெற்றி பெற வைப்பது பாஜக.வுக்கு எளிதாகி உள்ளது.
பாஜக.வை சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்தால், சிக்கலான அரசியல் சூழ்நிலை களில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு எளிதில் ஒப்புதல் பெற முடியும். இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது. உத்தராகண்ட்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 56 இடங்களை பாஜக பிடித்துள்ளது. இதன்மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த இரு மாநில எம்எல்ஏ.க்களின் வாக்குகள் மிகப்பெரும் பங்கு வகிக்கும்.
மாநிலங்களவையில் பாஜக.வுக்கு போதிய பலம் இல்லை. ஆனால், உ.பி., உத்தராகண்ட்டில் கிடைத்த வெற்றியால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மேலும் பல எம்.பி.க்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. அப்போது, 2 மாநிலங்கள் சார்பில் மாநிலங் களவைக்கு அதிக எம்.பி.க்களை பாஜக தேர்ந்தெடுக்கும். அதன் மூலம் மாநிலங்களவையிலும் பாஜக.வின் பலம் அதிகரிக்கும்.
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, அந்த மாநில எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை யால் வகுக்க வேண்டும். அதில் வரும் ஈவை 1000-த்தால் வகுத்தால் எவ்வளவு வருகிறதோ அதுதான் ஒரு எம்எல்ஏ.வின் வாக்கு மதிப்பாகக் கணக்கிடப் படுகிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறும்.
எனவே, பாஜக.வுக்கு தற்போது எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை கூடியிருப்பதால் குடியரசுத் தலை வர் தேர்தல் எளிதாகி இருக்கிறது. மேலும், இந்தத் தேர்தல் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) போன்றவற்றுக்கு ஒப்புதல் பெற பாஜக.வுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அத்துடன் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. இந்தப் பதவியைக் கூட்டணி கட் சிக்கு பாஜக விட்டுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.