பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நவ்ஜோத் சிங் சித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசு தலைவருமான ஹமித் அன்சாரிக்குப் பதிலாக சிறப்புப் பணியாற்றிய குர்தீப் சிங் சாப்பல் தனது ட்விட்டர் பதிவில், “நவ்ஜோத் சிங் சித்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்” என்று கூறியுள்ளார்.
இவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பும் முன்னர் தனியார் தொலைக்காட்சியில் கூறும்போது, “பஞ்சாப் மாநில மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்” என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சித்துவை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முயற்சி செய்து வருவதாக சில நாட்கள் முன்பு செய்திகள் அடிபட்டன. இந்நிலையில் இவரது ராஜ்யசபை உறுப்பினர் பதவி ராஜினாமா பல யூகங்களுக்கு தளம் அமைத்துள்ளது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜேட்லிக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கோரப்பட்டது, இதனால் தேர்தலில் நிற்க முடியாமல் போனது குறித்து அவர் கடும் ஏமாற்றமடைந்திருந்தார்.
10 ஆண்டுகளாக அமிர்தரசஸ் தொகுதியில் எம்.பி.யாக பிரதிநிதித்துவம் பெற்ற சித்து, அருண் ஜேட்லிக்காக விட்டுக் கொடுத்தது, கடைசியில் அருண் ஜேட்லியின் தோல்வியில் முடிந்து தொகுதியையே விட்டுக் கொடுக்குமாறு பாஜக-வுக்கு அமைந்தது.
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.