இந்தியா

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை

செய்திப்பிரிவு

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து, டெல்லி விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை, அரிதினும் அரிதானதாக எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கூறி, தண்டனையை அறிவித்த விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா, ஒட்டுமொத்த சமுதாயத்தையே இந்தச் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நால்வரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

டெல்லி சம்பவம் நடந்து 9 மாதத்தில் இந்தப் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது.

முன்னதாக, டெல்லியில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி இரவு, ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து வீசியெறியப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி அவர் உயிரிழந்ததையடுத்து, நாடு முழுவதும் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் தாகூர் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங் டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு சிறார் நீதிமன்றத்தில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஞ்சிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவர்கள் குற்றவாளி என கடந்த 10-ம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT