இந்தியா

வனவிலங்குகளை கொல்லும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: மத்திய அரசிடம் வன உயிரின பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தல்

பிடிஐ

வன விலங்குகளை கொல்வது ஒன்று தான் தீர்வு என மத்திய அரசு முடிவெடுக்கக் கூடாது என்று வன உயிர்கள் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும் நீலா (நிலகை) மான்களை கொல்ல மத்திய அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒருவாரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட நீலா மான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மத்திய அரசின் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் மேனகா காந்திக்கும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் விலங்குகளை கொல்லும் மேலோட்டமான முடிவுகளை மத்திய அரசு கைவிட்டு, மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என இந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சம்மேளனத்தின் கீழ் ஒன்று திரண்டுள்ள என்ஜிஓ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அமைப்புகள் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நீலா மான் போன்ற வனவிலங்குகளை கொல்வதற்கு உத்தரவிட்டிருப்பது மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளை கொலை செய்வது தான் ஒரே வழி என முடிவு எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளை ஆராய வேண்டும். அதற்கு தேவையான நேரம், பணம் ஆகியவற்றையும் செலவிட முன் வர வேண்டும். 100 மான்களை மட்டும் சுடுவதற்கு அனுமதியளித்தால், 500 மான்களை சுட்டுவிடுவர். மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் அரியவகை உயிர்களும் தவறுதலாக சுடப்பட்டு இறக்க நேரிடும். எனவே கொல்வதற்கான முடிவை அரசு வாபஸ் பெற வேண்டும். விலங்குகளை கொல்லும் தவறான கொள்கை முடிவுகள் நமது இயற்கை வளத்தை அழித்துவிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT