மான்வேட்டை வழக்கில் இன்று (வெள்ளி) ஜோத்பூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நடிகர் சல்மான் கான், அந்த மான் இயற்கை மரணம் எய்தியது என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்றோ, ‘தவறு’ என்றோ சல்மான் கான் பதில் அளித்தார். இதனையடுத்து விசாரணை பிப்ரவரி 15-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
“டாக்டர் நெபாலியாவின் முதல் தடயவியல் அறிக்கையே உண்மையானது, அதில் அவர் மான் இயற்கையாகவே மரணமடைந்தது என்று கூறியுள்ளார். இதுதான் உண்மை, மற்ற சாட்சியங்களெல்லாம் தவறு” என்றார் சல்மான் கான்.
நீதிபதி தல்பத் சிங் ராஜ்புரோஹித் அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட சுமார் 65 கேள்விகளை சல்மானிடம் கேட்டார். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் இல்லை என்றோ தவறு என்றோதான் பதில் அளித்தார்.
ஒரு கேள்வியில் நீதிபதி நேரடியாக, “நீங்கள் மானை துப்பாக்கியால் சுட்டதை இருவர் பார்த்ததாக கூறியுள்ளனர்” என்று கேட்டதற்கு தவறு என்று பதில் அளித்தார்.
ஜீப்பில் மானின் முடியும் ரத்தக்கறைகளும் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே என்று கோர்ட் கேட்க, சல்மான் கான் மீண்டும் தவறு என்று பதில் அளித்தார்.
மேலும் தான் குற்றமற்றவர் என்றும் வனத்துறையினர் புகழ்பெற விரும்பி இந்த வழக்கை தன் மீது ஜோடித்துள்ளனர் என்றும் கூறினார் சல்மான் கான்.
இவருடன் சயீஃப் அலி கான், நீலம், தபு, சோனாலி பெந்த்ரே ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர்.