இந்தியா

காங். ஆதரவு, ரயில் பயணம்: ஆம் ஆத்மி மீது பேரவையில் பாஜக தாக்கு

செய்திப்பிரிவு

ஊழல் கட்சி என்று வருணித்த காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளதாக, பாஜக கடுமையாக சாடியுள்ளது.

பதவியேற்பு விழாவுக்கு ரயிலில் வந்தது உள்ளிட்ட ஆம் ஆத்மியின் நடவடிக்கைகள், மக்களைக் கவரும் பப்ளிசிட்டி உத்தி என்றும் டெல்லி சட்டப்பேரவையில் அக்கட்சி கடுமையாக விமர்சித்தது.

டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பேசிய சட்டப்பேரவை பாஜக தலைவர் ஹர்ஷவர்தன், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

"கடந்த ஆறு மாதங்களாக மிகப்பெரிய ஊழல் கட்சி என காங்கிரசை ஆம் ஆத்மி கட்சி குறை கூறி வந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலை விசாரித்து அதில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால், எந்தக் கட்சியின் ஊழல் ஆட்சியை எதிர்த்து போட்டியிட்டாரோ, அதே கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ளார் கேஜ்ரிவால். இதற்காக, நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை என்ன என்பதை கேஜ்ரிவால் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்" என்றார் ஹர்ஷவர்தன்.

பாதுகாப்புக்கு போலீஸ் தேவை இல்லை என கேஜ்ரிவால் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், பதவி ஏற்பு விழாவின்போது, ராம்லீலா மைதானத்தில் 4,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பப்ளிசிட்டி உத்திகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி அவர், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மெட்ரோ ரயில் மூலம் பதவி ஏற்பு விழாவுக்கு வருவதாக கேஜ்ரிவால் கூறினார். ஆனால், இவர்களுக்காக ஒரு சிறப்பு ரயிலே விடப்பட்டது என்றார்.

மேலும், ஊழல் கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைத்த நீங்கள் ஊழலை பற்றி பேச தகுதியை இழந்து விட்டீர்கள். அவ்வாறு தகுதியை இழந்த கட்சியின் தலைமையிலான அரசுக்கு பாஜகவால் ஆதரவு அளிக்க முடியாது" என்றார் அவர்.

SCROLL FOR NEXT