தான் சார்ந்த சமூகத்தின் ‘மகத்துவத்தை’ விதந்தோத மதவாத தேசியவாதங்கள் தனக்கான வரலாற்றை தானே கண்டுபிடித்துக் கொள்ளும், வரலாற்றாசிரியர்களின் ஆய்வுபூர்வ வரலாற்றை ‘பாரபட்சமானது’என்று அவை நிராகரிக்கும் போக்கு கொண்டது என்று வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் வாதிடுகிறார்.
“ஆன் நேஷனலிசம்” என்ற நூலை ஏ.ஜி.நூரனி மற்றும் சதானந்த் மேனன் ஆகியோருடன் சேர்ந்து எழுதியுள்ள ரோமிலா தாப்பர் அளித்துள்ள நேர்காணலில் எது உண்மையான தேசியவாதம், எது போலி தேசியவாதம், நம் நாட்டுக்குப் பொருத்தமான தேசிய வாதம் எது ஆகியவை பற்றி பேசியுள்ளார்.
அலெஃப் வெளியிட்டுள்ள இந்த புதிய நூலில் இந்த வரலாற்றாசிரியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் ஆரம்பம், இயல்பு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை விரிவாக எடுத்தியம்பியுள்ளனர்.
நடப்பு விவகாரங்களை உள்ளடக்கி மதவாத தேசியவாதம் தனக்கென்றே கட்டுக்கதைகளை உருவாக்கி தனக்கான வரலாற்றை தானே கண்டுபிடித்துக் கொள்ளும் என்று ரொமிலா தாப்பர் வாதம் புரிகிறார்.
ரொமிலா தாப்பர் கூறியதாவது:
இத்தகைய கட்டுக்கதைகளை ஆய்வு செய்தால் நடப்பு அரசியலில் அதன் தேவை குறித்த கூடுதல் விளக்கங்களை அது அளிக்கும். மதவாத தேசியவாதங்களின் வெறுப்பு அல்லது துவேஷ இலக்கு எப்போதும் காலனியாதிக்கம் செய்பவர்கள் அல்ல, மாறாக இங்கு அதிகாரத்தைப் பிடிக்க போட்டியில் இறங்கும் குழு மீதே இதன் இலக்கு இருக்கும். எனவே இந்த பகையைக் கிளப்ப்பும் தேசியவாதத்தின் இலக்கு உள்நாட்டினர் மீதே திருப்பிவிடப்படும்.
இதனுடன் மதச்சார்பற்ற தேசியவாதத்தை ஒப்பு நோக்கினால் வரலாற்றாசிரியர்கள் ஆய்ந்தறிந்த விவரங்களை இது பயன்படுத்திக் கொள்ளும் மேலும் கடந்த காலம் பற்றிய கற்பனைக் கட்டுக்கதைகளை மதச்சார்பற்ற தேசியவாதம் தவிர்க்கவே முயற்சி செய்யும்.
மதச்சார்பற்ற தேசியவாதமும் எதிர்-காலனிய தேசியவாதமே. இங்கு பகைமை சமூகத்திற்கு வெளியேயிருந்து வந்து ஆதிக்கம் செலுத்தும், பண்பாட்டுக்கு அன்னியமான, காலனியாதிக்கச் சக்திகளுக்கு எதிரானதாகவே இருக்கும். பகைமையை காலனியாதிக்கச் சக்திகளுக்கு எதிராக திருப்பிவிடும் போது இதில் பங்கேற்கும் குழுவை வைத்து தேசியவாத பிணைப்பை ஏற்படுத்துவதாகும்.
நாம் ஒரு தேசம் என்பதால் இந்த தேசியவாதம் என்ற ஒன்று எப்படி உருவானது, எங்கிருந்து வந்தது, நம்மை எந்த அடிப்படையில் ஒரு தேசமாக பிணைத்துள்ளது என்பதை கண்டறிவது முக்கியமாகும்.
தேசியவாதம் என்ற நிகழ்வு நவீன காலங்களின் கண்டுபிடிப்பாகும், சுமார் கடந்த 3 நூற்றாண்டுகளாகவே இத்தகைய நிகழ்வு சிந்தனையிலும் செயலிலும் தன்னை செலுத்தியுள்ளது.
இந்தியாவில் இது சற்று பிற்பாடே வந்தது. வரலாற்று மாற்றங்கள் புதிய உத்வேகங்களையும், ஆசைகளையும் கொண்டு வந்தது, மேலும் இது பல்வேறு வழிகளில் வடிவம் பெற்றது, அதில் தேசியவாதம் என்ற ஒன்றும் அடங்கும். தேசியவாதம் என்பது ஒரு இயக்கமாகவோ, கொள்கையாகவோ பண்டையகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாதது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். ஆனால் இத்தகைய தேசியவாதத்திற்கு பங்களிப்பு செய்யும் பாரம்பரியமும், பண்பாடும் வரலாறும் முந்தைய காலக்கட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
காலனியாதிக்க சக்திகளுக்கு எதிராக பல்வேறு மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், மொழிக்குழுக்கள், பிராந்தியங்கள் ஒன்றிணைந்து காலனியாதிக்க சக்திகளை விரட்டி அடித்து சுதந்திரம் பெறுவதை நோக்கிய நடவடிக்கையில் ஒன்றிணைந்ததில் இந்திய தேசியவாதத்தின் வேர்கள் அடங்கியுள்ளது.
பல்வேறு பண்பாடுகள் கொண்ட பன்மைக் கலாச்சாரம் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், அதாவது மதங்கள், மொழி, சட்டம் மற்றும் சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் பன்மைத்துவம் உள்ள பண்பாடுகள் கொண்ட ஒவ்வொரு நாட்டிலும் அனைவரிடையேயும் பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு இருந்தே தீரும்.
பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு என்பது சண்டை சச்சரவுகள், முரண்பாடுகள், மோதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் கடந்த காலங்களில் கூட்டிணைந்த வாழ்க்கை என்பது எப்படி பரஸ்பரமாக அணுகப்பட்டது என்பது முக்கியம், அதே போல் தேசம் என்ற ஒன்று தற்போது உருவெடுக்கும் வேளையில் இந்த பன்மைத்துவத்தை எப்படி அணுகுவது என்பதும் முக்கியமாக தேவைப்படும் அணுகுமுறையாகும்.
ஒரே மதத்தினருக்கு, ஒரே சமூகத்தினருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும், பகிர்ந்து கொள்ளப்பட்ட பன்முகபண்பாட்டை மறுக்கும், கடந்த காலத்தில் திரும்பத் திரும்ப மிகவும் கூர்மையான பாகுபாடுகள் இருந்ததாகவும், இந்த பாகுபாடுகளின் தன்மையை ஆராயமலும் மீண்டும் மீண்டும் பாகுபாடுகளையே பேசி தக்கவைக்கும் முயற்சியைச் செய்வதுதான் போலி தேசியவாதம்.
இந்து பெரும்பான்மையை வலுப்படுத்த, பிற்கால முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இந்துக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள் என்று கோரப்படுகிறது, அதாவது இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக இருந்ததாகக் கோரப்படுகிறது, இத்தகைய கருத்தாக்கங்கள் பாதிக்கப்பட்டோரின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. இதுதான் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துகிறது.
தங்கள் அரசியல் கொள்கைக்கு உத்வேகமூட்டும் நோக்கதுடனேயே இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இரட்டை தேசக் கொள்கையை வலியுறுத்திய 19-ம் நூற்றாண்டு காலனியாதிக்க பார்வைகளின்படியும் கூட இத்தகைய அரசியல் கொள்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளை வரலாற்றுபூர்வமாக பார்த்தோமானால் இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என பல்வேறு பண்பாடுகளிலிருந்தும் பல்வேறுதரப்பினர் இந்துமத உருவாக்கத்திற்கு வளமையாக, படைப்பூக்கத்துடன் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதே உண்மை.
பலதரப்பினர் பங்களிப்பு செய்த இந்த காலக்கட்டம்தான் உயர்சாதி இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு பொருளாதார வளங்களை அளித்துள்ளது, இதன் மூலம் இவர்கள் கலை, இலக்கியங்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்களாக மாற முடிந்துள்ளது, எனவே இதன் மூலமான விளைவு மனதில் பதியத்தக்கதாகும்.
இவ்வாறு கூறினார் ரொமிலா தாப்பர்.