இந்தியா

ஊழலில் கைதேர்ந்தது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாஜக ஊழலில் கைதேர்ந்த கட்சி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தின் பன்ஸ்வாரா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் சாலை, ரயில், விமான போக்குவரத்து மேம்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியைவிட மூன்று மடங்கு அதிகமாக வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலுமே பாஜக ஆட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

ஆனால் ஒரே ஒரு துறையில் மட்டும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக முதலிடத்தில் உள்ளது. அந்தத் துறை ஊழல். பாஜக ஆட்சி நடத்தும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் கரைபுரண்டோடுகிறது. பாஜக ஊழலில் கைதேர்ந்த கட்சி.

ஏழைகளின் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை. ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தினால், அவை வெறும் பண விரயம் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

காங்கிரஸை பொறுத்தவரை ஏழைகளை முன்னேற்றுவதுதான் எங்களின் பிரதான கொள்கை. ஏழைகள் மட்டுமல்ல, பழங்குடிகள், தலித் மக்களின் நலனுக்காக காங்கிரஸ் அயராது பாடுபட்டு வருகிறது. வறுமைச் சுவர் ஏழைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துகிறது. அந்தச் சுவரை உடைத்தெறிந்து மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் உறுதிப் பூண்டுள்ளது. காங்கிரஸ், பாஜகவின் கொள்கைகளை சீர்தூக்கிப் பார்த்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி. ராஜஸ்தான் முதல்வர்

அசோக் கெலோட் உள்ளிட்டோர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT