இந்தியா

டிஎஸ்பி தற்கொலை வழக்கில் அமைச்சர் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு; கர்நாடக அமைச்சர் ராஜினாமா

இரா.வினோத்

காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தற்கொலை தொடர்பாக கர்நாடக அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜார்ஜ் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

மங்களூரு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.கே. கணபதி கடந்த 7-ம் தேதி மடிகேரியில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ''எனக்கு ஏதாவது நேர்ந்தால் பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், காவல்துறை உயர் அதிகாரிகள் ஏ.எம்.பிரசாத் (உளவுத்துறை) மற்றும் பிரணாப் மொஹந்தி (சட்டம் ஒழுங்கு) ஆகியோரே காரணம்'' என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் அமைச்சர் ஜார்ஜை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தன. மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன. கர்நாடக முதல்வர் சித்தராமையா இவ்வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இறந்த க‌ணபதியின் மகன் நேஹால் இவ்வழக்கில் அமைச்சர் ஜார்ஜ் மற்றும் 2 காவல்துறை உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மடிகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததால் நேஹால் மடிகேரி முதன்மை அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அன்னப்பூர்ணேஷ்வரி, ‘ஜார்ஜ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஏ.எம்.பிரசாத், பிரணாப் மொஹந்தி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306-ம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு விசாரிக்குமாறு’ காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மடிகேரி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நேற்று மாலை ஜார்ஜ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாக அறிவித்தார். இது தொடர் பான கடிதத்தை முதல்வர் சித்தரா மையாவுக்கு அனுப்பி வைத்தார்.

SCROLL FOR NEXT