இந்தியா

பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

14 வயது ஆருஷி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. காஜியாபாத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வருடம், 9 மாதங்கள் விசாரணைக்குப் பின் நீதிபதி எஸ்.லால் திங்கள்கிழமை தீர்ப்பு கூற உள்ளார்.

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார். இவர்களது ஜல்வாயு விஹார் வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த நொய்டா போலீஸ், முறையாக விசாரிக்காமல் அவரது வீட்டு வேலைக்காரனான ஹேமராஜ் எனும் நேபாளிதான் கொலையாளி எனவும், அவரை தேடி வருவதாகவும் அவசரக் கோலத்தில் அறிவித்தது. மறுநாள், தல்வார் வீட்டின் மேல் மாடிக் கதவை திறந்து பார்த்தபோது அங்கு ஹேமராஜ் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால், உபி போலீசாரின் அடுத்த சந்தேகம் அவர் மீது திரும்பியது. இவருடன் பணியாற்றும் மற்றொரு மருத்துவரும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான அனிதா துரானிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மகள் ஆருஷி எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் அரூஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார்.

அதன் பிறகு ஜூன் 1, 2008-ல் சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா, பக்கத்து வீட்டு வேலைக்காரன் ராஜ்குமார் மற்றும் இவரது நண்பன் விஜய் மண்டல் ஆகியோர் ஜூன் 13-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தல்வார் தம்பதிகளுக்கும் இந்த சோதனை 2 முறை நடத்தப்பட்டது. இதிலும் சிபிஐக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆருஷி கொலையின்போது கிடைத்த தடயங்களிலும் சிபிஐயால் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் கைவிரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே 29, 2010-ல் காஜியாபாத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், ‘தடயங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததால் வழக்கை முடித்து விட வேண்டும்’என சிபிஐ கோரியது. இதை, நீதிமன்றம் ஏற்க மறுத்து ராஜேஷ் தல்வாரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்ற ராஜேஷ் தல்வாருக்கு பலன் எதுவும் கிடைக்காமல் தொடர்ந்த விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

வழக்கின் ஓட்டைகள்

சம்பவம் நடந்த மறுநாள் மெத்தை தலையணை போன்றவைகளை மட்டும் கைப்பற்றி விட்டு, அவசரகோலத்தில் ஆருஷி கொலை செய்யப்பட்ட இடம் கழுவி விடப்பட்டிருந்தது. ஆருஷி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டாரா என்பதை

அறிய, அவரது பிறப்பு உறுப்பிலிருந்து ஆதாரங்களாக எடுக்கப்பட்ட கண்ணாடி ஸ்லைடுகள் பரிசோதனை சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது இடையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதை சம்பந்தப்பட்ட ஆய்வகத்தின் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

சுமார் ஐந்தரை வருடத்திற்கு முன் நடந்த கொலையின் வழக்கில் சிபிஐ தரப்பில் 39 சாட்சிகளும் எதிர்தரப்பில் வெறும் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.வழக்கை துவக்கத்தில் விசாரித்த சிபிஐயின் குழு மாற்றப்பட்டு, சிபிஐ இணை இயக்குநர் ஜாவேத் அகமத் தலைமையில் மற்றொரு குழு அமர்த்தப்பட்டது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT