விவசாயிகள் தற்கொலை விவகாரத் தில் மத்திய அரசு தவறான பாதை யில் பயணம் செய்வதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது. தற்கொலைக்குப் பின் நிவாரணத் தொகை கொடுப்ப தற்குப் பதில், பிரச்சினைக்கான காரணத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் உயிரிழந்த 619 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், பயிர்கள் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000 என்ற அளவில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இம் மனுவை கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், விவசாயிகள் தற்கொலை என்பது நாடு முழுவதும் உள்ள பிரச்சினை என்பதால், இதை விவசாயிகளுக்கான தேசிய கொள்கை 2007-ன் தோல்வியாக எடுத்துக் கொண்டு விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.
பயிர் காப்பீட்டு திட்டம்
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, ‘விவசாயி களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. கடந்த 2015-ல் கொண்டு வரப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். விவசாயிகளுக்கான மற்ற திட்டங்களும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, விவசாயி களுக்கு துன்பம் வரும்போது அரசு துணை நிற்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் அமல் படுத்தப்படும்’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ‘விவசா யிகள் தற்கொலை என்பது தீர்க் கப்பட வேண்டிய மிக முக்கிய பிரச்சினை. விவசாயிகள் தற்கொலை செய்த பின்னர் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாக அமை யாது. விவசாயிகள் தற்கொலை நடப்பதற்கு முன்பே அதற்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் தற்கொலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையே விவசாயிகள் தற்கொலை சம்ப வங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் கொன் சால்வஸ், ‘அரசின் கொள்கை மற்றும் திட்டங்கள் நீண்டகால மாக உள்ளன. ஆனால், அவை முறையாக அமல்படுத்தப்படுவ தில்லை. பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பிரபல பத்திரிகையாளர் பி.சாய் நாத் போன்றவர்கள் விவசாயிகள் தற்கொலை குறித்து ஆய்வறிக்கை களை சமர்ப்பித்துள்ளனர். அவர் களது கருத்துகளையும் பரிந்துரை களையும் கேட்டு இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மத்திய அரசு விரிவான பதிலை அளிக்கும்படி தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக் கின் அடுத்த விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.