மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. அவ்வழியாக பயணித்த 2 பேருந்துகளில் இருந்த 22 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மஹத் - போலட்பூர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த 2 பேருந்துகளில் இருந்த 22 பேரது நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சுற்றுலா துறைக்குச் சொந்தமான அந்த இரண்டு பேருந்துகளிலும் 2 ஓட்டுநர்கள், 2 நடத்துனர்கள், 18 பயணிகள் என மொத்தம் 22 பேர் இருந்துள்ளனர். இரண்டு பேருந்துகளும் அதிலிருந்தவர்களும் காணாமல் போனதை மகாராஷ்டிரா முதல்வர் தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிந்த ட்வீட்களில், "மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மஹத் - போலட்பூர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மற்றொன்று புதியது. பழைய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ராய்கட் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் பேசியுள்ளேன். மஹாபலேஸ்வர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
காணாமல் போன பேருந்தை கண்டுபிடிக்க தேசிய கடலோரக் காவற்படை சேட்டக் ரக ஹெலிகாப்டரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. தேடுதல் வேட்டையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர்
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரங்களைக் கேட்டறிந்தார். மீட்பு மற்றும் தேடுதல் பணியில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு:
பேருந்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மாநில போக்குவரத்து துறையுடன் தொடர்பு கொள்ளும் வகையில் 02141- 222118 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1077 கட்டணமில்லா தொலைபேசி சேவையும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
ராஜ்நாத் உறுதி:
மக்களவையில் மகாராஷ்டிரா விபத்து குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளதாகவும் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.