ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
ஒடிசா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி. தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை மக்கள் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. மகாராஷ்டிர நகராட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிர மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் முற்றிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தால் நாங்கள் மமதை கொள்ள மாட்டோம். மக்களுக்கு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதற்கான ஊக்கத்தையே இது அளிக்கிறது.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது போர் தொடரும். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு சிலர் தொடர்ந்து பொய்யை பரப்பினர். தாம் இதுவரை செய்துவந்த தவறுகள் வெட்டவெளிச்சமாகிவிட்டதே என பயந்தனர். நாட்டை பல ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்காமல் விடக்கூடாது.
உ.பி.யில் கல்வி அமைப்பில் ஊழலும் குற்றங்களும் மலிந்துள்ளன. இது குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். இது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
150 பேரை பலிகொண்ட கான்பூர் ரயில் விபத்துக்கான சதித் திட்டம் நேபாளத்தில் இருந்து தீட்டப்பட்டுள்ளது. தேசபக்தி மிகுந்தவர்கள் இப்பகுதியில் தேர்வு செய்யப்படுவது அவசியம். அப்பொழுதுதான் இப்பகுதி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.
உ.பி. தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறாவிட்டால் சமாஜ்வாதி கட்சிக்கோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சிக்கோ ஓரிடம் கூட கிடைக்காது. 100 சதவீத இடங்களையும் பாஜக கைப்பற்றும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.