பசு பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட பதின் பருவ சிறுவர், அங்கே வந்திருந்த மாணவரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்வலைகளைக் ஏற்படுத்தியுள்ளது.
மாணவரைப் பத்திரிகையாளர் என்று தவறாக நினைத்ததால் கத்தியால் குத்தியுள்ளார். ஹரியானா மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறியபோது, ''கேரளாவில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை எதிர்த்து பசு பாதுகாப்பு சேவா தளம் என்ற அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் உறுப்பினராக இல்லாத மோஹித் என்ற 19 வயது மாணவர் ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு கத்திக் குத்து வாங்கிய சிவம் என்பவர், தன் பத்திரிகை நண்பருடன் போராட்டத்தைப் பார்வையிட வந்துளார். கோஹனா பகுதியைச் சேர்ந்த சிவம் மதியம் சுமார் 2.30 மணிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
புகைப்படத்தை எடுப்பதில் பிரச்சினை
அங்கே படங்கள் எடுப்பது குறித்து பத்திரிகையாளருக்கும் மோகித்துக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கேமரா சிவத்தின் கைகளில் இருந்தது. மோஹித் சிவத்தைப் படம் எடுக்குமாறு கூற, அவர் மறுத்துள்ளார். இது சண்டையாக உருவெடுத்துள்ளது. உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிவம், மோகித் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
3 முறை கத்தியால் குத்து
காவல்துறையினர் மோஹித்தைக் கைது செய்ய சிவத்துடன் ஒரு காவலரை அனுப்பினர். அவர்களைப் பார்த்து ஓட முயற்சித்த மோஹித்தை, சிவம் துரத்தியுள்ளார். அப்போது மோஹித் 3 முறை சிவத்தைக் கத்தியால் குத்தியுள்ளார். அதற்குப் பிறகு அவரைப் பிடித்தோம்'' என்றனர்.
சிவம் தற்போது குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.