தேர்தலில் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேட்பாளர்களின் பிரச்சார செலவை அரசே ஏற்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் பண விநியோகத்தை கட்டுப்படுத்த இந்திரஜித் குப்தா கமிட்டி (1988), இந்திய சட்ட ஆணையம் (1999) ஆகியவை ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளன. அவற்றில் பண விநியோகத்தை கட்டுப்படுத்த வேட்பாளர்களின் பிரச்சார செலவை அரசே ஏற்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப் பட்டது.
இதே பரிந்துரையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்துள்ளார். கொல்கத்தா வில் நேற்று அவர் பேசியதாவது:
தேர்தல்களில் கருப்பு பணப் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேட்பாளர்களின் பிரச்சார செலவை அரசே ஏற்கும் பரிந்துரை குறித்து விவாதம் நடத்த வேண்டியது அவசியம். அப்போது தான் பண விநியோகத்தை தடுக்க முடியும். இதர தேர்தல் சீர்திருத்தங் களையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக கட்டுப்பாடு கள் விதிக்கக்கூடாது, என்றார்