இந்தியா

காவிரியைக் காக்கும் போராட்டங்கள்: அதிரும் கர்நாடகா

எஸ்.ராஜா செல்லம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மரங்களை அகற்றி மின்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரிவிவசாய அமைப்புகளின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

மைசூர் அருகே கைகா என்ற பகுதியிலிருந்து குடகு வனப்பகுதி வழியாக கோழிக்கோடு வரை 400 கிலோ வாட் திறன் கொண்ட புதிய பவர் கிரிட் பாதையை அமைப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கியது.

ஒரு லட்சம் மரங்கள்

இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த குடகு வனப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட உள்ளதாக கர்நாடகா விவசாய அமைப்பினர் கொதித்து எழுந்துள்ளனர். கடந்த வாரம் இந்த திட்டப்பணிகள் தொடங்கிய நிலையில் 7 நாட்களில் 5 கிலோ மீட்டர் நீளத்த்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட, 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்கள் இதுவரை வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டம்

மரம் வெட்டுவதை நிறுத்தக் கோரியும், மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும் கர்நாடகா விவசாயிகள் சங்கம், காவிரி பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட விவசாய அமைப்புகள் கடந்த 24-ம் தேதி பேரணியாகச் சென்று, மாவட்ட ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் 24 மணி நேரத்திற்குள் மரங்களை வெட்டும் பணியை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று கூறி மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது குடகு பகுதியில் சர்வே பணி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

இரு மாநில விவசாயிகள்

கர்நாடகா மாநில விவசாய அமைப்புகள் காவிரியை காக்கும் இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருதினர். எனவே தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் மூலமாக தமிழக விவசாயிகளையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க வைக்க முயன்றனர். அதன் பலனாக 24-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச பொதுவுடைமை கட்சி மற்றும் தமிழக உழவர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

காவிரி காப்பு போராட்ட இயக்க தலைவர் பி.சி.நஞ்சப்பா கூறும்போது ‘’புதிய மின் திட்டம் அமைய மாற்று வழிகள் பல உள்ளன. ஏற்கெனவே வேறு வழியில் இயங்கும் 220 கிலோ வாட் திறன்கொண்ட மின்பாதையை மேம்படுத்தி அதன்மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்தலாம்.

சுற்றுச்சூழலும், விவசாயமும் பாதிக்காத வகையில் தரையின் கீழாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்’’என்றார்.

இந்த திட்டம் நிறைவேற்ற கர்நாடகா மாநிலம் மடிகேரி பகுதியிலிருந்து பணிகள் தொடங்கியது போலவே, கேரளா மாநிலம் வயநாடு பகுதியிலிருந்தும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதை எதிர்த்து அதற்கு அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் குட்டா (மாநில எல்லை) பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்ட அமைப்புகள் தயாராகி வருகின்றன.

SCROLL FOR NEXT