ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பின் காரியக் கமிட்டி கூட்டம் நடத்தி தோல்வியை ஆராயாமல் காங்கிரஸ் தவிர்த்து வருகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகள் சேர்த்து மொத்தம் 828 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 66 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 116 தொகுதிகளும் கிடைத்துள்ளன. சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு தோல்வி ஏற்படும்போது, தேர்தலுக்குப் பின் தோல்விக்கான காரணங்களை ஆராய்வது அக்கட்சிகளின் வழக்கம். தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், முடிவுகள் வெளியான அன்று மாலையே பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை நடத்தியது. பிரதமர் மோடியும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்தும் ஆராயப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தனது தோல்வியை ஆராய, இன்னும் தனது காரியக்கமிட்டிக் கூட்டம் நடத்தாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்களே காரணம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “இக்கூட்டத்தை நடத்த மூத்த உறுப்பினரான ஏ.கே.அந்தோணி தயாராக இருப்பினும் மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனெனில் கேரளா மற்றும் அசாமில் காங்கிரஸ் தனது ஆட்சியை பறி கொடுத் துள்ளது. இதற்கு சோனியா உட்பட பல தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். இத்துடன் ராகுலின் திறமை மீது மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு விடும். இவற்றை தவிர்க்கவே சோனியாவும் தேர்தல் முடிவுகள் வெளியான சில தினங்களில் தனது ராய்பரேலி தொகுதிக்கு கிளம்பி விட்டார். இந்தப் பயணம் திட்டமிட்டதற்கு மாறாக முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா, தாம் வகிக்கும் தலைவர் பதவியில் ராகுலை நியமிக்கவும் திட்டமிட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற் காக ராகுலுக்கு சாதகமான முறை யில் முன்கூட்டியே காங்கிரஸ் தலைவர்களிடம் பேசிய பின் காரிய கமிட்டி கூட்டம் நடக்க வாய்ப் புள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பாக காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க இருப்பதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
காங்கிரஸில் மீண்டும் வாசன்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின் அதன் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங், காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களை திரும்ப அழைக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட் டிருந்தார்.
மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜி.கே.வாசன் இதை ஏற்று, மீண்டும் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஏற்பட்ட படுதோல்வியே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்காக வாசன் கடந்த வாரம் டெல்லி வந்து நான்கு நாட்கள் தங்கி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, வாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாதை அமைத்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது.