தெலங்கானா மாநிலத்தை விமர்சிக்கும் ஊடகங்களை குழி தோண்டி புதைப்போம் என அம்மாநில முதல்வர் கூறியுள்ள நிலையில், ஊடகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:
ஊடகங்களின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. ஆனால் அந்த சுதந்திரம் இலவசமாக கிடைக்காது. சுதந்திரத்துக்கு பொறுப்பு உள்ளது. எனவே, ஊடக சுதந்திரம் என்பது பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு பொறுப்புடன் நடந்து கொண்டால் ஊடகங்களை பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. தெலங்கானாவில் சில தெலுங்கு டிவி சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்யும். இதுவிஷயத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என அவர் தெரிவித்தார்.
தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக ஊடகங்களுக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதில் குறிப் பாக இரண்டு டி.வி. சேனல்களின் நிகழ்ச்சிகளை தெலங்கானாவில் ஒளிபரப்பாமல் கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் பெண் நிருபர்கள் மாநில அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பேசிய சந்திரசேகர ராவ், “தெலங்கானாவையோ அல்லது தெலங்கானா மக்களையோ விமர்சித்தால் அந்த ஊடகங்களை மண்ணில் புதைப்போம். தெலங்கானாவில் வாழ வேண்டுமானால் ஊடகங்கள் எங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என்றார். இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகராகவும் உள்ள ஜவடேகர், பாஜக அரசின் 100 நாட்கள் செயல்பாடு பற்றி கூறும்போது, “நரேந்திர மோடி தலைமையிலான அரசு உடனுக்குடன் கொள்கை முடிவு எடுப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரும் திட்டங்களுக்கு உடனுக்குடன் வெளிப்படையாக அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இந்த அமைச்சகத்தின் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது” என்றார்.