கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக புறப்பட்ட 54 பக்தர்கள் கொண்ட முதல் குழு வினர் லிபுலேக் கணவாயை நேற்று கடந்து பத்திரமாக திபெத்தை அடைந்தனர்.
இக்குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் என்பவர் மட்டும் உடல்நிலை குறைபாடு காரணமாக குன்ஜி முகாமுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடர்பனி சூழ்ந்த பாதை வழியாக பயணித்து காலை 7.20 மணிக்கு முதல் குழுவினர் லிபுலேக் கணவாயை கடந்தனர். கணவாயின் வடக்கு முனையில் காத்திருந்த சீன பாதுகாப்புப் படையினர் பக்தர்களை வரவேற்று திபெத் அழைத்துச் சென்றதாக, கைலாஷ் யாத்திரையின் அதிகாரப்பூர்வ முகமையான குமோன் மண்டல் விகாஸ் நிகாமின் பொது மேலாளர் டி.எஸ்.மார்டோலியா தெரிவித்தார்.
திபெத்தில் உள்ள சீன பகுதி யில் இந்திய பக்தர்கள் அடுத்த 8 நாட்களுக்கு தங்கி இருப்பார்கள் என்றும் 9-வது நாள் அவர்கள் மீண்டும் லிபுலேக் கணவாய்க்கு வந்தடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
திதிஹாத் அருகே மிர்த்தி என்ற பகுதியில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர், திபெத்தில் உள்ள தக்லகோட்டில் பக்தர்களைத் தொடர்பு கொள்வதற்கான சாதனங்களைத் தொழில்நுட்ப குழுவினர் நிறுவியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இந்திய பக்தர்கள் எந்தப் பகுதிக்கு சென்றிருக்கின்றனர் என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
முதல் பக்தர்கள் குழு திபெத்தை அடைந்துள்ள நிலையில், பண்டி என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட 47 பக்தர்கள் அடங்கிய 2-வது குழுவினர் காலா முகாமுக்கும், டெல்லியில் இருந்து புறப்பட்ட 56 பேர் கொண்ட 3-வது குழுவினர் கத்கோடம் என்ற முகாமையும் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 1,430 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். 60 பக்தர்கள் இடம் பெற்ற 18 குழுவினர் லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்) வழியாக கைலாஷ் மானசரோவர் செல்கின்றனர். 50 பக்தர்கள் அடங்கிய 7 குழுவினர் புதிதாக திறக்கப்பட்ட நாது லா (சிக்கிம்) கணவாய் வழியாக கைலாஷ் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
ஜூன் 29-ல் அமர்நாத் யாத்திரை
தெற்கு காஷ்மீரின் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 40 நாட்கள் நடக்கும் இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி முடிகிறது.