உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக நடத்தப்படும் எந்தவொரு பொதுக்கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடலநலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தவிர்த்து வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்தபோதும், அவர் பெரும்பாலான நாட்கள் அவைக்கு செல்லவில்லை. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற துணைத் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நடத்தப்படும் பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட 40 நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எந்தவொரு தேர்தல் பொதுக்கூட்டத்திலோ, பிரச்சாரத்திலோ பங்கேற்கப் போவதில்லை என சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முடிவுக்கு அவரது உடல்நிலை காரணமல்ல என கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல்களிலும் ராகுலுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.