மானிய விலையில் உணவுப்பொருட்களை வழங்க வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினரின் வீட்டு வாசலில் ‘நான் ஏழை, நான் மிகவும் ஏழை’ போன்ற வாசகங்களை எழுதி வசுந்தரா ராஜேயின் ராஜஸ்தான் அரசு பட்டியல் படுத்தியுள்ளதால் ஏழை எளிய மக்கள் அவமானத்தினால் தாங்கள் கூனிக் குறுகிப் போயுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அதாவது மானிய விலையில் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக இத்தகைய செயலை ராஜஸ்தான் அரசு செய்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது வசதி படைத்தவர்கள் உணவு மானியத்தை துஷ்பிரயோகம் செய்து தட்டிச் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தவுசா மாவட்டத்தில் 1.5 லட்சம் வீடுகளுக்கும் மேலாக இத்தகைய வாசகங்களை தாங்கி நிற்கிறது. இது மாநிலம் முழுதும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் எழுந்துள்ளன.
இத்தகைய வறுமை முத்திரையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களின் வீட்டு வெளிப்புறச் சுவர்களில் தேசிய உணவுப்பாதுகாப்புத் சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெறும் குடும்ப உறுப்பினர்கள் பெயரும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறும்போது, “எங்கள் வீட்டைக் கடந்து செல்லும் மக்கள் எங்களை கேலி செய்கின்றனர். எங்களுக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. அரசு எங்களைத் தூண்டி விடுவது போல்தான் தெரிகிறது” என்றார்.
அதாவது, ‘நான் ஏழை...உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நான் அரசிடமிருந்து ரேஷன் பொருட்கள் பெறுகிறேன்’ என்ற வாசகம் காணப்படுகிறது.
கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு நபர் கூறும்போது, “3 நபர்களுக்கு அவர்கள் எங்களுக்கு 15 கிலோ அரிசி கோதுமை கொடுக்கின்றனர். இதற்காக எங்கள் வீட்டுச் சுவற்றை நாறடிக்கின்றனர். ஏழை எளியவர்களை அவர்கள் கேலிக்குட்படுத்துகின்றனர்” என்றார்.
இது குறித்து இன்று (வியாழன்) செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி இதனை, “ஏழை மக்கள் மீதான சிக் ஜோக். ஏழை மக்களுக்கு உணவுப்பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, மக்களின் உரிமை. இது ஏதோ தான தர்மம் அல்ல. இது ஒன்றே பாஜக-வின் ஏழைகளுக்கு எதிரான போக்கிற்கான சாட்சியமாக நிற்கும்” என்று சாடினார்.
ஸ்வராஜ் அபியான் நிறுவனர் யோகேந்திர யாதவ் கூறும்போது, “இத்தகைய அருவருக்கத்தக்க ஜோக் அல்லது இன்சல்ட் அரசின் லட்சணமா?” என்று கேட்டுள்ளார்.
ஆனால் பாஜக-வோ மானியங்கள் ஏழைகளுக்கு விடுபட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காகவே இப்படி எழுதப்பட்டுள்ளது என்று நியாயப்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே ராஜஸ்தானில் இத்தகைய நடைமுறை கையாளப்பட்டது, பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திலும் 2012-ம் ஆண்டு ’நான் ஏழை’ என்ற வாசகம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் குடும்பத்தினரின் வீடுகளில் பெயிண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.