மகாராஷ்டிரத்தில் மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சலுகை 300 யூனிட்களுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மாநில தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமையில் மகாராஷ்டிர அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகள் தொடர் பாக திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது மும்பை நீங்கலாக மாநிலத்தின் பிற பகுதிகளில் 20 சதவீத கட்டணக் குறைப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டணக் குறைப்பு மகாராஷ்டிர மாநில மின் விநியோக நிறுவனத்தின் சேவை இருக்கும் பகுதியில் மட்டுமே அமல்படுத்தப்படும். மும்பையில் இந்த நிறுவனத்தைத் தவிர வேறு சில நிறுவனங்களும் மின் விநியோகம் செய்து வருகின்றன. எனவே, மும்பையில் மின் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட கட்டணத் தொகையை மகாராஷ்டிர மின் விநியோக நிறுவனத்துக்கு மாநில அரசு வழங்கும் என்றும், இதனால் அரசுக்கு கூடுதலாக மாதந்தோறும் கூடுதலாக ரூ.606 கோடி செலவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக மும்பை புறநகர்ப் பகுதிகளில் மின் விநியோகம் செய்து வரும் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் நிர்ணயித்த மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் சஞ்சய் நிருபம், பிரியா தத் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், மாதம் ஒன்றுக்கு 400 யூனிட்களுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு 50 சதவீத மின் கட்டணக் குறைப்பை அமல்படுத்தியது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், மின் கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது.