இந்தியா

வெள்ளி, செவ்வாய் கிரகங்களில் இஸ்ரோ ஆராய்ச்சி: மத்திய பட்ஜெட்டில் விண்வெளி துறைக்கு 23 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முதல்முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சியிலும், 2-வது முறையாக செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் ஈடுபடவுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஒரே சமயத்தில் 104 செயற்கைகோள்களை விண் ணில் ஏவும் வரலாற்று சாதனையை, வரும் 15-ம் தேதி இஸ்ரோ நிகழ்த்த வுள்ளது. இதில் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், இந்தியாவின் 3 செயற்கைக்கோள்களும் அடங்கும்.

இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்கா சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது. மற்றவை, இஸ்ரேல், கஜகஸ்தான், சுவிட்சர் லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை. கடைசியாக 2014-ல் ஒரே சமயத்தில் 37 செயற்கைக் கோள்களை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி யிருந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியா முறியடிக்கவுள்ளது.

இந்தச் சூழலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் இஸ்ரோ ஈடுபடவுள்ளது. கடந்த மாதம் இந்தியா வந்த நாசாவின் ஜெட் புரொபல்ஷன் இயக்குநர் மைக்கேல் வாட்கின்ஸ், இந்தியா வின் வெள்ளி கிரக ஆராய்ச்சி யில் அமெரிக்காவும் பங்கெடுக்க விரும்புகிறது என தெரிவித்திருந்தார். இதன் பிறகே வெள்ளி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி மீது இஸ்ரோ கவனம் செலுத்தி வரும் தகவல் தெரியவந்தது. மேலும், வெள்ளி கிரக திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தையும் தொடங்கி யிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறும்போது, ‘‘விண்வெளி ஆராய்ச்சி துறையின் சர்வதேச சாதனைகளில் இந்தியாவும் பங்கெடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் மூலம் பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களின் நிலைமையை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.

வெள்ளி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தை முடிப்பதற்காக பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கான நிதி ஒதுக்கீடும் இந்த முறை 23 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஒரே சமயத்தில் 104 செயற்கைகோள்கள் ஏவப்பட உள்ளன.

SCROLL FOR NEXT